செய்திகள்

கூடங்குளம் போராட்டக்காரர்களுடன் சந்திப்பு: தடையை மீறி ஜெர்மன் உளவாளி தமிழ்நாட்டுக்குள் நுழைந்தது எப்படி?- முக்கிய புகைப்படங்கள் சிக்கியது


கூடங்குளம் போராட்டக்காரர்களுடன் சந்திப்பு: தடையை மீறி ஜெர்மன் உளவாளி தமிழ்நாட்டுக்குள் நுழைந்தது எப்படி?- முக்கிய புகைப்படங்கள் சிக்கியது


நாகர்கோவிலில் பிடிபட்ட ஜெர்மன் நாட்டுக்காரர் உளவாளி என்றும் அவர் தேடப்பட்டு வந்தவர் என்றும் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. நாகர்கோவில் லாட்ஜில் தங்கி இருந்த ஜெர்மன் நாட்டுக்காரர் சான்டெக் ரெய்னர் ஹெர்மன் நேற்று முன்தினம் பிடிபட்டார்.

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்துக்கு வெளிநாடுகள் பண உதவி செய்வதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில் ஹெர்மன் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவரை சென்னைக்கு அழைத்து வந்து இந்திய பாதுகாப்பு ஏஜென்சிகளான 'ஐ.பி.', 'ரா' ஆகியவற்றின் அதிகாரிகளும், சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து லேப்டாப், மெமரி கார்டு, மொபைல் போன், டிஜிட்டல் கேமிரா ஆகியவை கைப்பற்றப்பட்டன.

அவற்றில் இருந்த முக்கிய போட்டோக்கள், தகவல்களை அதிகாரிகள் 'டவுன்லோடு' செய்து பதிவு செய்து கொண்டு அவரை நேற்று அதிகாலை ஜெர்மனி நாட்டுக்கு திருப்பி அனுப்பி விட்டனர். அதிகாரிகளின் ஆரம்பக்கட்ட விசாரணையில் அவர் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்த உளவாளி என்று தெரிய வந்தது. அவர் எந்த நாட்டுக்காக உளவு பார்த்தார் என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

பிடிபட்ட ஹெர்மன் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டவர். இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சகம் தேடப்படுபவர் பட்டியலில் அறிவித்து அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. ஆனால் அவர் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். அவர் எப்படி இந்தியாவுக்குள் நுழைந்தார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. சுற்றுலா விசாவில் வந்தவர் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே தங்க முடியும். நாகர்கோவில் லாட்ஜில் அவர் 15 நாட்கள் தங்கி இருந்தார்.

அதற்கு முன் எவ்வளவு காலம் எங்கு தங்கி இருந்தார். அடைக்கலம் கொடுத்தது யார்? என்று விசாரணை நடக்கிறது. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரையும், நாகர்கோவிலைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் லால் மோகன் என்பவரையும் சந்தித்து இருப்பதற்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளது. அவர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டதையும், கூடங்குளம் பகுதிக்கு அடிக்கடி சென்று வந்ததையும் பிடிபட்ட ஹெர்மன் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஹெர்மன் கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு பண உதவி செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விசாரணை நடக்கிறது. அவர் 2 மாதங்களுக்கு மேல் நாகர்கோவில் பகுதியில் தங்கி இருந்தார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை தனது டிஜிட்டல் கேமிராவில் பல கோணங்களில் படம் எடுத்து 'லேப்-டாப்'பில் பதிவு செய்துள்ளார். பல தஸ்தாவேஜுக்களையும் பதிவு செய்துள்ளார். 2010-ம் ஆண்டு மே 23-ந்தேதி நாகர்கோவிலில் நடந்த கூடங்குளம் எதிர்ப்பு மெழுகுவர்த்தி போராட்டத்தில் ஹெர்மன் கலந்து கொண்டுள்ளார்.

இதன் மூலம் பல வருடங்களாக இந்தியாவில் தொடர்ந்து தங்கி இருந்தாரா? அல்லது அடிக்கடி வெளிநாடு சென்று வந்தாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அவர் சுற்றுலா விசாவில் வந்தாலும் நாகர்கோவில் பகுதியில் மட்டும் நீண்ட காலம் தங்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் யாருக்காகவோ உளவு பார்க்க வந்திருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உதயகுமாருடன் தொடர்பு வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் சிக்கி இருப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார். 2010-ம் ஆண்டிலேயே இங்கு வந்து ரகசியமாக தங்கி கூடங்குளம் போராட்டத்தை எப்படி நடத்தவேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கியதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. சில வெளிநாடுகள் அவரை ஏஜெண்டாக அனுப்பி இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக உளவுப்பிரிவு அதிகாரி கூறினார்.

பிடிபட்ட ஹெர்மன் 'சாப்ட்வேர்' துறையில் அனுபவமுள்ளவர். அவர் இந்தியாவுக்கு வந்த பின்பு இடையிடையே தாய்லாந்து, நேபாளம், கம்போடியா நாடுகளுக்கும் சமீபத்தில் சென்று வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதுபற்றி விசாரணை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நாகர்கோவிலில் பிடிபட்ட ஹெர்மனை நாங்கள் சாதாரண ஆளாக பார்க்கவில்லை. அவர் சுற்றுலா பயணியாக இருக்க முடியாது. அவர் வெளிநாடுகளைச் சேர்ந்த தனிப்பட்ட யாருக்காவோ அல்லது நிறுவனத்துக்காகவோ இங்கு வந்து தங்கியுள்ளார் என்பது திட்டவட்டமாக தெரிய வந்துள்ளது. வளரும் நாடுகள்தான் அவரது இலக்காக இருந்திருக்கிறது. எனவே அணுசக்தி எதிர்ப்பு கொள்கையிலும், அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திலும் மூளையாக செயல்பட்டுள்ளார் என்றே நாங்கள் நம்புகிறோம்.

அவர் நேபாளம் நாட்டுக்கு தாராளமாக சென்று வந்துள்ளார். அங்கு அவர் எதற்காக சென்று வந்தார் என்று விசாரித்து வருகிறோம். ஹெர்மன் 1992-ம் ஆண்டில் இருந்தே அணுஉலை எதிர்ப்பு போராட்டக்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளோம். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப், மெமரி கார்டு, மொபைல் போன்கள் மூலம் மேலும் தகவல்களை திரட்டி வருகிறோம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
Share this post :

Post a Comment

 
Support : Tech Media | Mass Media | Copyright © 2012. செய்திகள் - All Rights Reserved
Site Created by Tech Media Published by News star
Proudly powered by Kingdom of கீழக்கரை...