செய்திகள்

கோடையை சமாளிக்க சென்னைக்கு விரைவில் கிருஷ்ணா தண்ணீர்: அதிகாரிகள் தகவல்


கோடையை சமாளிக்க சென்னைக்கு விரைவில் கிருஷ்ணா தண்ணீர்:  அதிகாரிகள் தகவல்
சென்னை,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் கடந்த வருடத்தை விட குறைவாக தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளில் தற்போது மொத்தம் 7 ஆயிரத்து 780 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது.

கடந்த ஆண்டு இதே நாளில் 9 ஆயிரத்து 596 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இப்போது ஆயிரத்து 816 மில்லியன் கனஅடி தண்ணீர் குறைவாக உள்ளது. சென்னை குடிநீர் ஏரிகளில் இருக்கும் தண்ணீரை கொண்டு சென்னை நகரின் தேவையை சமாளிக்க முடியும். என்றாலும், சென்னை மாநகராட்சியுடன் புறநகர் பகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே குடிநீர் தேவை அதிகரித்திருக்கிறது. சென்னை நகருக்கு தற்போது தினமும் 750 மில்லியன் லிட்டர் வீதம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தொடர்ந்து இதே அளவில் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க, தமிழ்நாடு- ஆந்திர மாநிலங்களுக்கு இடையே கிருஷ்ணா தண்ணீர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 2 தவணையாக சென்னைக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும். இந்த ஆண்டு முதல் கட்டமாக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 7.84 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது.

2-வது கட்டமாக ஜூன் மாதம் வரை மீதம் உள்ள தண்ணீர் தரவேண்டும். கோடை தேவைக்கு 2-வது கட்டமாக கிருஷ்ணா தண்ணீரை வழங்க வேண்டும் என்று ஆந்திர அரசிடம், தமிழகம் சார்பில் விரைவில் கோரிக்கை வைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் 2 வாரத்தில் சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் வரவாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பூண்டி ஏரியின் மதகுகளை புதுப்பித்தல், சோழவரம் ஏரியின் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான வேலைகள் முடிந்தவுடன் கிருஷ்ணா தண்ணீர் வரும். ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் 6.4 டி.எம்.சி. தண்ணீர் இருந்தாலே சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீரை விட முடியும். தற்போது இந்த அணையில் 38.76 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. எனவே தண்ணீர் திறப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
Share this post :

Post a Comment

 
Support : Tech Media | Mass Media | Copyright © 2012. செய்திகள் - All Rights Reserved
Site Created by Tech Media Published by News star
Proudly powered by Kingdom of கீழக்கரை...