அகமதாபாத்: குஜராத் மாநில மீன் வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் சோலங்கி மீது ஊழல் வழக்கு பதிவு செய்யக்கோரி அகமதாபாத் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் புருஷோத்தம் சோலங்கி. இவர் கடந்த 2008ம் ஆண்டு மாநிலத்தில் உள்ள 58 நீர்நிலைகளில் மீன்பிடி உரிமைக்கான ஒப்பந்தம் வழங்கியதில் ரூ. 11 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பல கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை குறைந்த விலைக்கு தனியாருக்கு தாரை வார்த்ததாகவும் இதன் மூலம் அரசுக்கு ரூ.440 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை ஐகோர்ட் விசாரித்து சோலங்கி வழங்கிய ஒப்பந்தங்களை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு அப்பீல் செய்தது. இந்த மனுவை அண்மையில் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. ஒப்பந்தம் வழங்கியதில் மீன்வளத்துறை அமைச்சர் தவறு செய்திருப்பதாக தீர்ப்பில் கூறியிருந்தது. இதை தொடர்ந்து அமைச்சர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என மாநில அரசிடம் இஷாக் மராதியா என்பவர் கோரிக்கை மனு கொடுத்தார். நீண்ட இழுபறிக்குப்பின் இவரது கோரிக்கையை மாநில அரசு நிராகரித்தது. இதை தொடர்ந்து அகமதாபாத் ஐகோர்ட்டில் மராதியா மனு தாக்கல் செய்தார். மீன் வளத்துறை அமைச்சர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை குஜராத் ஐகோர்ட் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
Post a Comment