செய்திகள்

பேரவையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த 3 அமைச்சர்கள் ராஜினாமா





பெங்களூர் : கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தில் செல்போனில் ஆபாச படம் பார்த்த அமைச்சர்கள் லட்சுமண் சவதி, சி.சி பாட்டீல் மற்றும் கிருஷ்ண பாலேமர் நேற்று ராஜினாமா செய்தனர். கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 30ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. சிந்தகி தாலுகாவில் பாகிஸ்தான் கொடியேற்றப்பட்டது தொடர்பாக நேற்று முன்தினம் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, கூட்டுறவு அமைச்சர் லட்சுமண் சவதி செல்போனை வயிற்றின் கீழ் மறைத்து வைத்துக் கொண்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அருகிலிருந்த மகளிர் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீலும் செல்போனை எட்டிப் பார்த்து கொண்டிருந்தார். அவர்களின் ஆர்வத்தை டிவி கேமராவில் ‘ஜூம்‘ செய்து பார்த்தபோது, அவர்கள் ஆபாச படம் பார்த்தது வெளிச்சத்துக்கு வந்தது. அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சித்தராமையா, மஜத தலைவர் குமாரசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதை முதலில் அமைச்சர் லட்சுமண் சவதி மறுத்தார். செல்போனில் தனக்கு அமைச்சர் கிருஷ்ண பலேமர் அனுப்பிய எஸ்எம்எஸ்,ஐ பார்த்ததாக கூறினார். இதையடுத்து, சர்ச்சையில் பலேமரும் சிக்கினார்.

நேற்று காலை பெங்களூரில் அவசரமாக பாஜ கட்சியின் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. அதில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்களும் பங்கேற்றனர். அதில், அவர்கள் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டது. அதற்கு அவர்களும் சம்மதித்து ராஜினாமா கடிதத்தை தந்தனர். சட்டப் பேரவை வழக்கம்போல் நேற்று காலை 10 மணிக்கு கூடியது. அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அவர்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளதாக முதல்வர் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் அமளியால் அவை நடவடிக்கை நாள் முழுவதும் ஸ்தம்பித்தது.

மாலையில் சபாநாயகர் போப்பையா எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பிரச்னை குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட அனைத்து கட்சிக்குழுவை  நியமித்தார். இக்குழு மார்ச் 13க்குள் அறிக்கை தரும். அதோடு 3 அமைச்சர்களும் பிப்ரவரி 13க்குள் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.  இதற்கிடையே அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களை  ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
Share this post :

Post a Comment

 
Support : Tech Media | Mass Media | Copyright © 2012. செய்திகள் - All Rights Reserved
Site Created by Tech Media Published by News star
Proudly powered by Kingdom of கீழக்கரை...