செய்திகள்

நிலம் நீரில் வாழும் புதிய உயிரினம் கண்டுபிடிப்பு



நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினத்தை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பல தசாப்தங்களில் முதல் முறையாக, நிலத்திலும் நீரிலும் வாழும் கால்களற்ற உயிரினத்தை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக, இந்த ஆய்வுக் குழுவுக்கு தலமையேற்றிருந்த டில்லி பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் கல்விக்கான மையத்தின் பேராசிரியர் டாக்டர் எஸ் டி பிஜு தெரிவித்துள்ளார்.
இவை செஸிலியன் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், வாலில்லாத இந்த உயிரினங்களின் உட்புற மற்றும் வெளிப்புறத் தோற்றங்கள், இவை போன்ற கால்களற்ற வேறு ஒன்பது வகையான நில-நீர் வாழ் உயிரினங்களுடன் ஒப்பிட்டே, இவை முற்றிலும் புதியவை என்று தாங்கள் கண்டறிந்ததாக அந்த ஆய்வுக் குழுவினர் கூறியுள்ளனர்.
மரபணுச் சோதனைகளும் இவை முற்றிலும் புதிய உயிரினங்களே என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
நிலம் மற்றும் நீரில் வாழும் உயிரினங்களிலேயே இந்த செஸிலியன் குடும்பத்தின் உயிரினங்களே எளிதில் புரிந்து கொள்ள முடியாதவை.
இந்த உயிரினங்களை முதல் முறையாக பார்க்கும் போது இவை புழுக்களை போன்றே தோன்றும், அவை காடுகளிலுள்ள ஈரப்பதம் மிக்க மணற்பரப்புகளில் வாழ்பவை.
ஆப்பிரிக்க கண்டத்தில்தான் இந்த புதிய உயிரினங்களின் நெருங்கிய உறவுகள் வாழ்வதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
"இந்த உயிரினங்களை பாதுகாப்பதில் பெரும் சவால்கள் இருக்கின்றன"
டாக்டர் எஸ் டி பிஜு
செஸிலியன்கள் மிகவும் இரகசியமான ஒரு வாழ்க்கை முறையை கொண்டு ஈரமான மணற்பரப்புக்கு கீழேயே வாழ்பவை என்பதால் அவற்றை கண்டுபிடிப்பதே பெரும் சவாலான ஒரு செயல் எனவும் டாக்டர் பிஜு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை, பல பகுதிகளில் இதுவரை இல்லாத வகையில் ஈரமண்ணை தோண்டி ஆய்வுகளை மேற்கொள்ளும் களப்பணி நடைபெற்றதாகவும், அதன் விளைவே இந்தக் கண்டுபிடிப்பு எனவும் இதில் ஈடுபட்டிருந்த அறிவியல் குழுவினர் கூறியுள்ளனர்.
முதுகெலும்புடன் கூடிய ஒரு புதிய உயிரினக் குடும்பத்தை கண்டுபிடிப்பது என்பது மிகவும் அரியது என்றும் கூறும் விஞ்ஞானிகள், உலகின் 61 நில நீர் வாழ் உயிரினக் குடும்பங்களில் பெரும்பாலானவை 19 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியிலேயே குறிக்கப்பட்டுள்ளன எனவும் இந்த ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பல புதிய உயிரினங்கள் அதிகம் பாதிக்கப்படாத மழைநீர் காடுகளில் கண்டுபிடிக்கப்படும் நிலையில், மனிதர்கள் வசிக்கும் இடங்களில் இந்த புதிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டிப்பது, இவற்றின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது என்று கூறும் அவர்கள், அதை பாதுகாப்பது பெரிய சவாலாக இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.
இந்த புதிய உயிரினத்துக்கு உள்ளூர் பழங்குடி இனத்தவர்களின் காரோ மொழியில் இது அழைக்கப்பட்ட சிக்கிலிடே என்ற பெயரையே கண்டுபிடிப்பு குழுவினர் வைத்துள்ளனர்.
சிக்கிலிடே தாய் நிலத்துக்கு கீழே கூடு கட்டி, அதில் முட்டையிட்டு, அதை தனது உடலால் சுற்று வளைத்து இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் வரை அடை காக்கும். அவை புழுவாக உருபெறாமல் நேரடியாக சிறு குஞ்சுகளாகவே வெளிவருவதும் இவற்றின் சிறப்பு எனவும் இதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தியாவின் வடகிழக்கு காட்டுப்பகுதிகளில் விரைவான மனித குடியேற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், இவ்வகையான உயிரினங்களை காப்பாற்ற வேண்டிய சவால் தங்களை கவலையடையச் செய்துள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
Share this post :

Post a Comment

 
Support : Tech Media | Mass Media | Copyright © 2012. செய்திகள் - All Rights Reserved
Site Created by Tech Media Published by News star
Proudly powered by Kingdom of கீழக்கரை...